புத்தாண்டு பரிசாக விமான பயணிகளுக்கு 3 சலுகைத் திட்டங்களை ஏர் - இந்தியா அறிவித்துள்ளது.
முதல் சலுகைத் திட்டம்: பயணி ஒருவர் ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையான காலத்தில் தில்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய 6 நகரங்களுக்கு இடையே 25 முறை பயணம் செய்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் அவர் நியூயார்க் (அமெரிக்கா), லண்டன் (பிரிட்டன்), ஷாங்காய் (சீனா) போன்ற ஏதாவது ஓர் இடத்துக்குச் சென்று வருவதற்கு இலவச டிக்கெட் (எகானாமி பிரிவு) வழங்கப்படும்.
இச் சலுகையை அந்தப் பயணியோ அல்லது அவருக்கு வேண்டிய நபரோ பெற்றுக்கொள்ளலாம்.
குறைந்த விலை டிக்கெட்: மார்ச் 1 முதல் ஏப்ரல் 15 வரையான காலத்தில் இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல குறைந்த விலையில் ரூ. 1,875 டிக்கெட் (ரூ.999 மற்றும் வரிகள்) அறிமுகப்படுத்துகிறது. இந்தக் குறைந்த விலை டிக்கெட் ஜனவரி 5 தேதி முதல் ஜனவரி 20-ம் தேதி வரை விற்கப்படும்.
மூன்றாவது திட்டம்: ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையான காலத்தில் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு மூன்று முறை சென்று வந்தால் அந்தப் பயணி ஒரு வார காலம் உள்நாட்டுக்குள் ஏர்இந்தியா விமானத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்.
ஏர்இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட பின் அறிவிக்கப்படும் பெரிய சலுகைத் திட்டங்கள் இவைதான்.
ஏர் இந்தியா நிறுவனம் நாள்தோறும் 400 விமானங்களை 39 நாடுகளுக்கு - 120 இடங்களுக்கு இயக்குகிறது.
கருணாகரன் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்
கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கருணாகரன் இரண்டரை ஆண்டு பிரிவிற்குப் பின் மீண்டும் காங்கிரசில் சேர்ந்துள்ளார். தில்லியில் சோனியா காந்தியை சந்தித்து தன் விருப்பத்தை அவர் வெளிப்படுத்த சோனியாவும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
எந்த நிபந்தனைகளுமின்றி கட்சியில் மீண்டும் சேர்ந்திருப்பதாகவும், கட்சிக்கு உழைப்பது நாட்டிற்கு உழைப்பது போலாகும் என்று கருணாகரன் பின்னர் தெரிவித்தார்.
அவரது மகன் முரளீதரனும் விரைவில் காங்கிரசில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தித் தொகுப்பு: சூர்யா.வி
No comments:
Post a Comment